ஆரோக்கியம்
இந்தியாவில் பெண்கள் கருவுறுதல் குறைந்து வருகிறதா? எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக உள்ள அமைப்பு மக்கள் தொகை நிதியம். இது சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு மதிப்பீட்டின்படி 2025ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக இருக்கும் என தெரிகிறது. தொடர்ந்து உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்து வந்தாலும் நமது பெண்கள் கருவுறுதல் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அதன் காரணமாக குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்மிடையே உள்ள உணவுப் பழக்கங்களில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாறுதல்களும் தகுதியுள்ள தம்பதியினருக்கு உரிய சத்தான உணவுகள் இல்லாமல் கண்டதை உண்பதும் புகையிலைப் பொருட்கள், மது, போதைப் பொருட்கள் ஆகியனவும் இந்த சீரழிவுக்குக் காரணமாக அமைகின்றன.
பெண்கள் தற்போதைய தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு சந்ததியினரை கொடுத்து மக்கள்தொகை அளவை பராமரிக்க தேவையானதை விட குறைவாகவே குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். அதாவது இந்த விகிதம் 2.1 சதவீதமாக இருக்க வேண்டிய நிலையில் 1.9 சதவீதமாக குறைந்துள்ளது.
பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தாலும் இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது. 0-14 வயது வரம்பில் 24 சதவீதமும், 10-19 வயது வரம்பில் 17 சதவீதமும், 10-24 வயது வரம்பில் 26 சதவீதமும் உள்ளனர். 15-64 வயது வரம்பில் 68 சதவீத மக்கள் உள்ளனர். இது இந்தியாவின் பெரும் பலமாக கருதப்படுகிறது.
நாட்டில் முதியோர் எண்ணிக்கை (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 7 சதவீதமாக உள்ளது. இந்தியார்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 71 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 74 ஆண்டுகளாகவும் இருக்கிறது. இது வரும் காலங்களில் ஆயுட்காலம் மேம்படும்பொழுது அதிகரிக்கும்.
இந்தியாவின் மக்கள்தொகை அடுத்த 40 ஆண்டுகளில் படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கும். எனவே, மக்கள்தொகையில் சீரான வளர்ச்சி, ஆரோக்கியமான சந்ததியினர் ஆகியவை வருங்கால இந்தியாவின் நலனுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடும். 1960ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 43.6 கோடியாக இருந்தபோது, ஒவ்வொரு பெண்களும் சராசரியாக 6 குழந்தைகள் பெற்றுக் கொண்ட நிலை மாறி இன்று சராசரியாக 2 குழந்தைகளே பெற்றுக் கொள்கின்றனர்.
எனவே, ஆரோக்கியமான வருங்காலம் அமைந்திட அரசும் அரசுத் துறைகளும் உரிய திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அணைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
















