இந்தியா
இனிமேல் வாக்களிக்க சொந்த ஊர் போக தேவையில்லை.. வருகிறது ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்!

வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த ஓட்டிங் மிஷின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே நாம் நமது சொந்த தொகுதியில் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை கண்டு பிடித்துள்ள நிலையில் இந்த மெஷின் மூலம் ஓட்டு போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தபோது 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்றும் 30 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அதற்கு ஒரே காரணம் வாக்களிப்பதற்காக பல கிலோ மீட்டர் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் நிலைமையை தவிர்ப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லாமல் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இருக்கும் இடத்திலிருந்தே நமது சொந்த ஊரில் உள்ள வேட்பாளருக்கு வாக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் இது குறித்து செயல் விளக்கம் அளிக்கவும் ஆலோசனை செய்யவும் 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்பார்கள் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வாக்குப்பதிவு முறையில் இருப்பது போலவே வாக்களிப்பில் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், வாக்கு மைய ஏஜென்ட்களுக்கான வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறை அமலுக்கு வர வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கூறினாலும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இந்தமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும் என்றும் எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.