இந்தியா
தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடம்… மோசமான சாதனையை பதிவு செய்த இந்தியா..!

உலகம் முழுவதும் இன்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பதும் இன்டர்நெட் இல்லாத உலகை இனி நினைத்து கூட பார்க்க முடியாது என்பது தெரிந்ததே. பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கிராமங்களையும் கூட தற்போது இன்டர்நெட் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் பல பரிவர்த்தனைகள் இன்டர்நெட் இருப்பதால் தான் சாத்தியமாகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்டர்நெட் தடங்கல்கள் என்பது உலகம் முழுவதும் இருக்கும் இன்டர்நெட் பயனாளிகளுக்கு இருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு சில நேரங்களில் அரசே வேண்டும் என்ற இணையத்தை முடக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது என்ற நிலையில் இது குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இண்டர்நெட் முடக்கத்தில் முதலிடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே இணைய தடங்கல்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்த பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த நிலையில் அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதும் ஐந்தாவது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 187 உலகளாவிய இணைய முடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் அதில் 84 இந்தியாவில் தான் நடந்துள்ளது என்பது குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மட்டும் 49 தடவை இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அரசு ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சியை அகற்றி இரண்டு கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளாக பிரித்தது. அதனை அடுத்து அங்கு நடந்த பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது இன்டர்நெட் முடக்கப்பட்டது என்பதும் அம்மாநிலத்தில் 49 முறை இணைய முடக்கம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் மூன்று முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது பலமுறை இணைய முடக்கங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவை அடுத்து உக்ரைன் நாட்டில் அதிகமாக இணைய முடக்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுப்பு நடத்தியது என்பதும் ரஷ்யா உக்ரைன் நாட்டின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்தவுடன் முதலில் இணைய துண்டிப்பை செய்தது என்றும் கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக தான் உக்ரைன் நாட்டில் சுமார் 22 முறை இணைய முடக்கம் ஏற்பட்டதாகவும் தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்தியா உக்ரைன் நாடுகளை அடுத்து ஈரான் அதிகமாக இணைய முடக்கத்தை சந்தித்துள்ளது. ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டில் 18 முறை இன்டர்நெட்டை முடக்கி வைத்ததாக கூறப்படுகிறது.