தமிழ்நாடு
ஆளுங்கட்சி லோடு லோடாக பணம் அள்ளி செல்வதை பறக்கும் படை பிடிப்பதில்லை: தினகரன் ஆவேசம்!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று வருகின்றனர். அதே போல தேர்தல் பறக்கும் படையினரும் பம்பரம் போல சுழன்று சோதனை செய்து பணங்களை கைப்பற்றுகின்றது.
ஆனால் இந்த சோதனையும், பணம் கைப்பற்றுதலும் எதிர் கட்சியினரை மட்டுமே குறிவைத்து நடப்பதாக இந்த தேர்தலில் பிரதானமாக குற்றம் சாட்டப்படுகிறது. முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதே குற்றச்சாட்டை வைத்தார். தற்போது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் தேர்தல் பறக்கும் படையினரின் இந்த சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது சரிதான். இதில் துரைமுருகனின் தவறு உள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து தேர்தல் ஆணையமும் பறக்கும் படையும் செயல்படுகிறது.
ஆளுங்கட்சியினர் லோடு லோடாக பணம் அள்ளிச் செல்கின்றனர். ஆனால் அதனை பறக்கும் படை பிடிக்கவில்லை என்பது எங்களது குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஆளுங்கட்சிக்கு ஒரு அளவுகோலும் எதிர்க்கட்சிக்கு ஒரு அளவுகோலும் வைப்பதுதான் தவறு என தேர்தல் பறக்கும் படையினரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை விமர்சித்தார்.





















