இந்தியா
திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன்: டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் குறித்து டுவிட் செய்தார். அவர் டூல்கிட்டை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் திஷா ரவி என்ற இளம்பெண்ணும் டூல்கிட் விவகாரத்தில் சிக்கினார்.
அவர் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் இருந்த நிலையில் அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி காவல்துறையால் சட்டவிரோதமாக திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் அமைத்த விதிமுறைகளை டெல்லி காவல் நீதிமன்றம் மீறி உள்ளது என்றும் திஷா ரவியை மீட்க கர்நாடக உள்துறை அமைச்சருக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திஷா ரவிக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பதால் இந்த வழக்கு முடியும்வரை அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து எதுவும் கருத்து சொல்ல மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















