தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய இந்த மசோதாவை காலம் தாழ்த்தி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தமிழகத்தில் கடும் கண்டனங்களை எழுப்பின. இதனையடுத்து மீண்டும் இந்த மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார். இன்று காலை ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அவர் செல்லும் வழியில் திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.