இந்தியா
நீட் தேர்வு ஒத்திவைப்பா: மத்திய அரசு ஆலோசனை

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ. தேர்வு ஆகிய தேர்வுகளின் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன என்பதும், ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு தற்போது செய்து வரும் ஆலோசனையில் நீட்தேர்வு ஒத்தி வைக்கலாம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்னும் மாணவர்கள் பெறவில்லை என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எல்லாம் சரியாக சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இதனால் நீட் தேர்வை ஒத்தி வைப்பதே சிறந்தது என்று மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை ஒத்திவைக்கவே தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் ரத்து செய்யும் திட்டம் இல்லை என்றும் கூறப்படுகிறது.



