இந்தியா
முஸ்லீம் நாடுகளே சூரிய நமஸ்காரத்தை அங்கீகரித்துள்ளன: எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த பாஜக!

அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில் முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என முஸ்லீம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜக உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சூரிய நமஸ்காரத்தை ஏற்றுக்கொண்டு உள்ளன என்றும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை மாணவர்கள் அனைவரும் சூரியநமஸ்காரம் மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கைக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சூரிய வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை என்றும் இந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு கலாச்சாரத்தை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம் என்றும் மதச்சார்பற்ற கருத்துக்களுக்கு இது எதிரானது என்றும் இதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பணவீக்கம் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டிற்கு உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார். உலக அளவில் யோகா என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் யோகாவையும் அதன் அங்கமான சூரிய நமஸ்காரம் செய்வதையும் அங்கீகரித்து உள்ளது என்றும் எனவே இதில் அரசியல் செல்லாமல் எதிர்வரும் தேர்தலை கணக்கில் கொண்டு செயல்படாமல் சூரிய நமஸ்காரத்தை அங்கீகரிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.


















