இந்தியா
முதல் வேலை அமேசானில்.. 9 மாதத்தில் வேலைநீக்கம்.. இந்திய இளைஞரின் சோகமான பதிவு..!

இந்திய இளைஞர் ஒருவருக்கு படித்து முடித்தவுடன் அமேசான் நிறுவனத்தில் முதல் முதலாக வேலை கிடைத்த நிலையில் அந்த வேலை 9 மாதத்தில் பறிபோனது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் சமீபத்தில் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டது என்பதும் கடந்த ஜனவரியில் 18000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த இந்த நிறுவனம் தற்போது 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
பெரிய நிறுவனங்களில் வேலை நீக்க அறிவிப்பு காரணமாக தொழில் துறை ஒரு புதிய பதட்டத்தை சந்தித்துள்ளது என்பதும் வேலை இழந்தவர்கள் அடுத்த வேலை கிடைப்பதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேலை இழந்த இளைஞர்கள் தங்களது சோகத்தை லிங்க்ட்-இன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் இந்திய இளைஞர் ஒருவர், தான் அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 9 மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Layoffs
ஹர்திக் குரானா என்ற இளைஞர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளராக பணியில் சேர்ந்தார். கல்லூரியில் படித்து முடித்ததும் கிடைக்கும் முதல் வேலை என்பதால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் சோகமாக பதிவு செய்துள்ளார்.
இன்று எனது அமேசான் நிறுவனத்தின் கடைசி வேலைநாள். என் முதல் வேலை இவ்வளவு சீக்கிரம் முடிவடைந்தது ஏமாற்றமாக இருந்தாலும் அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைத்ததற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள என்னுடைய சக ஊழியர்கள் உதவினார்கள் என்றும் என்னுடைய மேலாளர்கள் என்னை அன்புடன் கவனித்துக் கொண்டார்கள் என்றும் பல அற்புதமான மனிதர்களை அமேசானில் நான் சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மென்பொருள் பொறியாளராக நான் எனது திறமை முழுவதும் வெளிப்படுத்தினேன் என்றும் புதிய வாய்ப்புகளை பங்களிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றேன் என்றும் கூறிய ஹர்திக் குரானா மேலும் எனது திறமையை நிரூபிக்க வேறொரு நிறுவனத்தில் வேலை தேடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த சோகமான பதிவு வைரல் ஆகி வருகிறது.