தமிழ்நாடு
டாஸ்மாக் விற்பனை: தீபாவளியை மிஞ்சிய புத்தாண்டு, புத்தாண்டை மிஞ்சிய பொங்கல்!

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் தற்போது பொங்கல் விற்பனை தொகை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி அன்று விற்பனையான டாஸ்மாக் விற்பனையை விட புத்தாண்டன்று அதிக விற்பனை ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் புத்தாண்டுக்கு ரூபாய் 145 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்த நிலையில் பொங்கல் தினத்தையொட்டி கிட்டத்தட்ட இருமடங்கு அதாவது 358 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் 5410 டாஸ்மாக் சில்லறை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுவகைகள் பொங்கல் தினத்தில் அபாரமாக விற்பனையாகியுள்ளது. வழக்கமாக வார விடுமுறை நாட்களில் 100 கோடிக்கும், அதைவிட அதிகமாகவும் விற்பனையாகி வரும் நிலையில் பொங்கல் தினத்தில் இருமடங்கு விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி 155 கோடி ரூபாய் ஜனவரி 13-ஆம் தேதி 203 கோடிக்கும் என மொத்தம் 358 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று திருவள்ளுவர் தினம், நாளை முழு ஊரடங்கு மற்றும் நாளை மறுநாள் தைப்பூசம் ஆகிய மூன்று தினங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கி வைத்து வாங்கி இருப்பு வைத்துக் கொண்டதால் இரண்டு நாள் டாஸ்மாக் விற்பனை அபார சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















