இந்தியா
ஒரே பள்ளியில் 85 மாணவர்களுக்கு கோவிட்-19 உறுதி.. அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

உத்தர்காண்ட் மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம், நைனிட்டால் பகுதியைச் சேர்ந்த ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.
முதலில் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது அந்த பள்ளியில் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் உள்பட 496 நபர்களிடம் இருந்து பெற்ற மாதிரிகளில் 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என துணை ஆட்சியர் ராகுல் ஷா கூறியுள்ளார்.

மேலும் அந்த பள்ளியை கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியுள்ளதாகவும், மாணவர்களைப் பள்ளியில் தனிமைப்படுத்தியுள்ள்தாவும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட்-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் ஆண்டி-ஜென் பரிசோதனையும் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை புதிதாக 4 நபர்களுக்கு ஓமிக்ரான் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரையில் 8 நபர்களுக்கு ஓமிக்ரான் கோவி-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








