சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ முன்பதிவு: என்ன காரணம்?

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாகியும் இந்த படத்திற்கான முன்பதிவு ஒரு தியேட்டர் கூட முழுதாக நிறைய வில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானதால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினாலும் திரையரங்குகளில் வெளியானால் தான் அந்த படம் உண்மையான வெற்றியை பெறுமா என்பது குறித்து முடிவு செய்ய முடியும்.
சூர்யா நடித்த ’சிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு அவர் நடித்த ஏழாம் அறிவு, மாற்றான், சிங்கம்-2, அஞ்சான், மாஸ், 24, சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் ஆகிய திரைப்படங்களில் ஒன்று கூட சூப்பர் ஹிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத்தான் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் என்ற படத்திற்கு வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது.

















