இந்தியா
ஓயோ ரித்தேஷ் அகர்வால் தந்தை பரிதாப பலி.. திருமணமான மூன்று நாட்களில் நடந்த சோகம்..!

ஓயோ நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருமணம் செய்தார் என்பதும் அவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பதும் தெரிந்தது. மேலும் தனது மனைவி உடன் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரித்தேஷ் அகர்வால் திருமணம் நடந்த 3 நாட்களில் அவரது தந்தை பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் குருகானில் உள்ள தனது குடியிருப்பில் வசித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பால்கனியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்
இந்த சம்பவம் நடந்த போது ரித்தேஷ் மற்றும் அவரது மனைவி கீதன்ஷா ஆகிய இருவரும் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ரமேஷ் அகர்வால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்தவிதமான காரணமும் இல்லை என்றும் எந்த விதமான குறிப்பு இல்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பால்கனியில் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருக்கும்போது தவறி விழுந்திருப்பார் என்று தான் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
உலகின் மிக இள வயது கோடீஸ்வரர்கள் ஒருவரான ரித்தேஷ் அகர்வால் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடந்த நிலையில் திருமணம் ஆன மூன்றே நாட்களில் அவர் தனது தந்தையை இழந்தது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் திருமணத்தால் உற்சாகமாக இருந்த அவரது வீடு தற்போது களை இழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. மிக இளம் வயதில் ஓயோ நிறுவனத்தை தொடங்கி கோடீஸ்வரர் ஆன ரித்தேஷ் அகர்வாலின் நிகர சொத்து மதிப்பு 7,253 கோடி என்பதும் தற்போது அவரது வணிகம்உலகில் உள்ள 300 நகரங்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.