இந்தியா
மோடியை சந்தித்து தமிழ் ஈழம் குறித்து பேசிய வைகோ!

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை எம்பியாக பதவியேற்கவுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர் ஈழம் தொடர்பாகவும் பேசியுள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எம்பியாக நாடாளுமன்றம் சென்றுள்ள வைகோ பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வருபவன் நான். அப்படியிருந்தும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
மேலும் மோடி என்னிடம், நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள் என கூறினார். அதற்கு நான் கொள்கையின் அடிப்படையிலேயே இவ்வாறு செயல்படுகிறேன் என தெரிவித்தேன். பின்னர் நில ஆர்ஜித சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் மூலம் கொன்ற விவகாரம், நதிகள் இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வு ஆகிய 3 விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினேன் என்றார். மேலும் தமிழ் ஈழம் குறித்தும் பேசினோம் என கூறியுள்ளார் வைகோ.





















