தமிழ்நாடு
நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்: பதற்றத்தில் காவல்துறை!

நாளைய தினம் தமிழகம் வர உள்ள பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத் திறந்து வைக்கிறார். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கி வைக்கும் அவர் அதன் பின்னர் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பிறகு பல்லாவரத்தில் இருக்கும் மைதானத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார். இந்நிலையில் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பிரதமர் மோடி நாளை தமிழகத்துக்கு வர உள்ளதால், ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படைத் தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கண்காணிப்பு வளையத்தில் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவைகளில் பலத்த சோதனை ஏற்படுத்தியுள்ளனர். சென்னைப் பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், அன்புத் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ளார். இதனால் பிரதமரின் பாதுகாப்பில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதால் தமிழக காவல்துறை பதற்றமாக உள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


















