சினிமா
விஜய் படத்தில் நடித்த பெருமாயி மாரடைப்பால் காலமானார்

பிரபல இயக்குநர் பாரதிராஜா மற்றும் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த அன்னம்பாரிப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பெருமாளின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“மனம் கொத்திப் பறவை”, “வில்லு” உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் கிராமப்புற கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பெருமாயி. நடிகர் பசுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான “தண்டட்டி” திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
கிராமிய மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த பெருமாயி மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.








