இந்தியா
பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் அடித்த விவசாயி: செல்லமாக தட்டினார் என எம்.எல்.ஏ சமாளிப்பு!

உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவை விவசாயி ஒருவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த முதியவர் தன்னை அடிக்கவில்லை என்றும் செல்லமாக கன்னத்தில் தட்டினார் என்றும் எம்எல்ஏ சமாளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ உன்னாவ் என்பவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சிலையை திறந்து விட்டு அவர் மேடையில் உட்கார்ந்து இருந்தபோது அவரது அருகில் வந்த முதியவர் ஒருவர் திடீரென அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதனால் மேடையில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த முதியவரை அப்புறப்படுத்தும் செயலில் இறங்கினர். இந்த சம்பவத்தை அடுத்து எம்எல்ஏவின் கன்னத்தை அறைந்தவர் விவசாயி என்றும், பாஜகவுகு எதிராக விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலத்திலும் எழுச்சி அடைய தொடங்கி விட்டார்கள் என்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் மோசமான கொள்கைக்கு விழுந்து அடி என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இந்தநிலையில் எம்எல்ஏ உன்னாவ் செய்தியாளர்களை சந்தித்த போது அந்த முதியவர் தன்னை அடிக்கவில்லை என்றும் அவர் என்னிடம் நெருங்கி வந்து மகனே என்று அன்புடன் கன்னத்தில் செல்லமாக தட்டினார் என்றும் அவர் ஏற்கனவே இதே போல் என்னை பலமுறை செய்துள்ளார் என்றும் இந்த சாதாரண விஷயத்தை எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே அரசியல் செய்கிறார்கள் என்றும் அந்த முதியவர் என் தந்தையைப் போன்றவர் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















