தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: இனி மாஸ்க் அணிய அவசியமில்லை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா இல்லாத தமிழகம் என்ற நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளதை அடுத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலகி கொள்ளப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .
மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை சுய விருப்பத்தின் பேரில் செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது எனவே இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.








