இந்தியா
நான் நினைத்த செல்போன் இது இல்லை: திருடிய செல்போனை திருப்பி கொடுத்த நபர்!

நான் நினைத்த செல்போன் இது இல்லை என்றும் தவறாக திருடி விட்டேன் என்றும் திருடிய செல்போனை திருட்டுக் கொடுத்த நபரிடமே திருப்பிக் கொடுத்த திருடனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு ஓடிவிட்டார். அவரை அங்கு உள்ளவர்கள் பிடிக்க முயன்றும் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஒரு சில நாட்கள் கழித்து செல்போன் திருடிய நபர் சம்பந்தப்பட்ட பயணியிடம் நேரில் வந்து செல்போனை திருப்பிக் கொடுத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது ’நீங்கள் கையில் வைத்திருந்த செல்போன் ஒன் ப்ளஸ் 9 புரோ என நினைத்து திருடி விட்டேன் என்றும் ஆனால் அது கேலக்ஸி எஸ் 5 செல்போன் ஆக இருந்தது என்றும் நான் நினைத்த போன் இது இல்லை என்பதை அறிந்தவுடன் மீண்டும் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்து திருப்பிக் கொண்டுவந்து கொடுக்க வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த வினோத சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருடு போன செல்போன் திருப்பி கிடைத்ததை அடுத்து அந்த நபர் மீது எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















