இந்தியா
ஓட்டு போடும்போது மம்முட்டி, மோகன்லாலை கண்டுகொள்ளாத கேரள மக்கள்: ஆனால் இங்கு?

தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் ஓட்டு போட வரும் போது அவரது ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முண்டியடித்துக்கொண்டு புகைப்படம் வீடியோக்கள் எடுத்ததும் செல்பி எடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் அஜித் கடுப்பாகி தன்னை செல்பி எடுத்த ரசிகர் ஒருவரின் போனை புடுங்கி வைத்துக் கொண்ட சம்பவமும் நடந்தது. அதேபோல் விஜய் ஓட்டு போட்டுவிட்டு சைக்கிளில் வெளியே செல்ல முடியாமல் திணறியதும், ரசிகர்களின் வெள்ளத்தில் சிக்கியதும் தெரிந்ததே.
ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் அம்மாநில சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அவரது முன்னும் பின்னும் இருந்த வாக்காளர்கள் இருவரையும் கண்டு கொள்ளவே இல்லை. மக்களோடு மக்களாக அவர்கள் சர்வசாதாரணமாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
தமிழகத்தில் மட்டும் தான் நடிகர்களை பார்ப்பதற்கும் அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பதும் கேரளாவில் மக்கள் எப்போதும் சினிமா நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.





















