கிரிக்கெட்
பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது மும்பை அணி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் அர்ஸ்தீப் சிங். அவர் நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பஞ்சாப் 214 ரன்கள்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாம் கர்ரன் 55 ரன்களும், ஹர்பிரீத் சிங் 41 ரன்களும் எடுத்தனர். இறுதி கட்டத்தில் ஜிதேன் சர்மா 4 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். மும்பை அணித் தரப்பில் பியுஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அர்ஜூன் தெண்டுல்கர், பெரன்டோர்ப் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
மும்பை போராடி தோல்வி
20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. இதனால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. மும்பை தரப்பில் கேமரூன் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும், நாதன் எலிஸ், லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 7-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மும்பை அணிக்கு இது 3வது தோல்வியாகும். கடைசி ஓவரில் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் மிடில் ஸ்டம்பு இரண்டு முறை இரண்டாக உடைந்து சிதறியது.