தமிழ்நாடு
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: ஓபிஎஸ் திடீர் பல்டியால் பாமக அதிர்ச்சி

வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா குறித்து திடீரென பல்டி அடித்து துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% சதவீத தனி உள் ஒதுக்கீடு சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் அதில் 10.5% ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டது என்பதும், இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திடீரென மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு தான் என்றும், இது இறுதியானது அல்ல என்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இந்த கருத்து காரணமாக பாமக அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த அருண் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பதும் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















