சினிமா செய்திகள்
அப்போ ஜிப்ஸி அரசியல் படமில்லையா ராஜூமுருகன்?

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியானது.
ஜிப்ஸி எனும் குதிரைக்கார இளைஞனாக ஜீவா நடித்துள்ளார். படத்தில் அனைத்து இந்திய அரசியலும் அப்படியே பேசப்பட்டிருப்பது டிரைலரிலேயே தெரிகிறது. அரசியல் நெடி பறக்க பறக்க இருந்த டிரைலரின் முடிவில் வரும் இயக்குநர் ராஜூமுருகன், இது ஒரு நல்ல இசைப்படம் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை சரிகமா யூடியூப் சேனலில் சப்ஸ்க்ரைப் பண்ணி கண்டு மகிழுங்கள் என கூறி செல்கிறார். இது அரசியல் படமா? இசை படமா என்பதை அவரே விளக்கினால் தான் உண்டு. டிரைலரை பார்த்துவிட்டு இது வெறும் அரசியல் படம் என்று குடும்ப ஆடியன்ஸ் வராமல் போய்விடுவார்களோ என ராஜூ முருகன் இவ்வாறு கூறியுள்ளாரா என்பது தெரியவில்லை.
ஒலிம்பிக் மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பாடல்கள் எல்லாமே அருமையாக உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் ஜிப்ஸி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















