தமிழ்நாடு
தாயின் கால்களைப் பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்: ஆறுதல் கூறிய சசிகலா!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். தாயின் மறைவால் சோகம் தாங்காத ஓபிஎஸ் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதுள்ளார். ஓபிஎஸ் தாய் மரணத்துக்கு சசிகலா இரங்கள் தெரிவித்துள்ளார்.

#image_title
கடந்த 23-ஆம் தேதி ஓபிஎஸ் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு சென்னை திரும்பினார் ஓபிஎஸ். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் இருந்த அவரது தாயார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இந்த மறைவு செய்தியை கேட்ட ஓபிஎஸ் மீண்டும் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு விரைந்தார்.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தனது தாயை பார்த்து கண்கலங்கி நின்ற ஓபிஎஸ் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுத்தார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தநிலையில், சசிகலாவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலா, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று ஆறுதலான வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.