சினிமா செய்திகள்
மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் சந்தானம்: ரசிகர்களை கவர்ந்த டிடி ரிட்டர்ன்ஸ் டீஸர்!

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏஜெண்ட் கண்ணாயிரம், ஏ 1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா மற்றும் குலுகுலு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
தில்லுக்கு துட்டு
சந்தானம் நடித்த திரைப்படங்களில் தில்லுக்கு துட்டு பேய் படமாக உருவாகி இருந்தது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதாநாயகனாக சந்தானம் நடித்த படங்களிலேயே அதிக வசூல் குவித்த படமாகவும் இது அமைந்தது. முக்கியமாக இவரது திரையுலக வாழ்வில் இப்படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இதனையடுத்து தில்லுக்கு துட்டு 2 ஆம் பாகத்திலும் நடித்தார். இதுவும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
டிடி ரிட்டர்ன்ஸ்
அடுத்ததாக மீண்டும் ஒரு பேய் படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தில்லுக்கு துட்டு 2 பாகங்களின் தொடர்ச்சியாக தயாராவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை பிரேமானந்த் இயக்கி வருகிறார்.
டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார். இவர் ஏற்கனவே நான் வேற மாதிரி மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்டங்களில் நடித்து இருக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.