சினிமா செய்திகள்
புலி வாலை பிடித்த நடிகர் சந்தானம் வீடியோ: கடுமையாக விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!

நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் கிறிஸ்மஸ் தினத்தில் பதிவு செய்த ஒரு வீடியோவில் அவர் புலியின் வாலை பிடித்து இருப்பது போன்று காட்சி இருக்கும் நிலையில் அதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக கடந்த 2002ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் சந்தானம் கடந்த சில வருடங்களாக கதாநாயகனாக மட்டும் நடித்து வருகிறார் என்பதும் அவர் நாயகனாக நடித்த படங்கள் சமீபத்தில் வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சந்தானம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது நீச்சல் குளம் அருகே புலியின் அருகே உட்கார்ந்து இருக்கிறார். அப்போது ஒரு பெண் புலியின் வாலை நீங்கள் இப்போது தொடலாம் என்று கூற அவர் புலியின் வாலை எடுக்கிறார். அந்த புலி மயக்கத்தில் இருப்பதாக சிலர் கூறிய நிலையில் அதன் சந்தேகத்தை போக்கும் வகையில் புலியின் தலையை ஒருவர் குச்சியால் அடிக்கும்போது அந்த புலி திடீரென விழித்து பார்க்கின்றது. இதனை அடுத்து புலியை சந்தானம் தட்டிக் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
Idharku per than 🐅 valai pidikratha 😜#tigerlove #traveldiaries pic.twitter.com/1uW77pmPgz
— Santhanam (@iamsanthanam) December 25, 2022
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 60 ஆயிரம் பார்வையாளர்களையும் டுவிட்டரில் 1.45 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. புலிக்கு மயக்க மருந்து கொடுத்து இருக்கலாம் என்று ஒரு சிலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து உள்ளனர். மேலும் இது போன்ற மிருகங்களை கிண்டல் செய்யாதீர்கள் என்றும் விலங்குகள் வதைசெய்வதை உங்களைப் போன்ற பிரபலங்கள் ஊக்குவிக்க வேண்டாம் என்றும் வெளிநாட்டு பயணத்தின் போது பொறுப்புடன் இருக்குமாறும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.உங்கள் ரசிகர்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைவதை உங்களை நேசிப்பவர்கள் விரும்பவில்லை என்றும் இன்னொரு ஒரு பதில் சொல்லியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வந்தபோதிலும் சந்தானம் இந்த பதிவை நீக்க வில்லை என்பதும் அது மட்டுமின்றி விமர்சனத்திற்கு எந்தவித பதிலையும் அவர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.