சினிமா செய்திகள்
தர்பார் வீடியோ லீக்; ஷாக் ஆன படக்குழு!

தர்பார் படத்தின் புகைப்படங்கள் கசிந்து வந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது போலீஸ் வாகனத்தில் இருந்து ரஜினி இறங்கி நடந்து வரும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும், தியேட்டரில் சென்று ரசிக்க வேண்டிய காட்சிகள் இப்படி இணையத்தில் கசிந்து கொண்டே இருந்தால், அது படத்தினை வெகுவாக பாதிக்கும் என்பதால், ஷூட்டிங் தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டு வருகிறார்.








