விளையாட்டு
பேட்மிண்டன் உலக சாம்பியனான பி.வி.சிந்து!

சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் அரை இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் ராட்சனோக் இண்டானோனுடன் மோதினார் இந்தியாவின் பி.வி.சிந்து. தரவரிசையில் 6-ஆம் இடத்தில் உள்ள ராட்சனோக் இண்டானோனை 21-16, 25-23 என்ற கணக்கில் நேற்று முன்தினம் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுகராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். முன்னாள் உலக சாம்பியனான நஜோமியை 21-19, 21-17 என்ற கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து முதன்முறையாக உலக பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.


















