உலகம்
இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரன் உடல் இல்லை: குழப்பும் போராளிகள்!

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இலங்கை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில் முன்னாள் போராளிகள் சில இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரன் உடல் இல்லை என கூறியுள்ளனர்.

#image_title
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது, சர்வதேச சூழலும், இலங்கையின் ராஜபக்ஷே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசிய தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என தெரிவித்தார்.

#image_title
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், பிரபாகரனின் பாதுகாவலர்களாக இருந்த சில போராளிகள் ஊடகங்களில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அதில், 2009-ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி வரை பிரபாகரன் போர்க்களத்தில் இருந்தார். அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
மேலும், இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 2009-ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் பிரபாகரன், பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இருக்கவில்லை. எனவே அவருக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது, அவர் உயிருடன் இருந்து அவரே இதனை அறிவிக்கும் வரை எதையுமே உறுதியாக சொல்லமுடியாது என்கிறார்கள்.


















