தமிழ்நாடு
வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 38 வயது நபர் கைது!

தமிழர் முன்னேற்றப் படை என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவில் இருந்து விலகி அதன் பின் தமிழர் முன்னேற்ற படை என்ற புதிய அரசியல் கட்சியை வீரலட்சுமி என்பவர் தொடங்கினார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் மாதம் அவரது மொபைல் போனுக்கு ஆபாச வீடியோக்கள் வந்தது. இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே மர்ம நபரிடமிருந்து வீரலட்சுமியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச வீடியோ வந்துள்ளது.
இதனை அடுத்து ஆவேசமான வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மிரட்டும் வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர்கள் மூன்று நாட்களில் சரணடைய வேண்டும் இல்லை என்றால் அவர்கள் பிடிபட்டவுடன் நிர்வாணமாக நிறுத்தி ஆணுறுப்பை அறுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஆரோக்கியசாமி என்றும் அவரது சொந்த ஊர் அரியலூர் அருகே உள்ள ஆண்டிமடம் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வீரலட்சுமியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















