தமிழ்நாடு
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை: ஆளுநர் காலம் தாமதிக்க கூடாது!

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ப்பட்ட வழக்கில் தற்போது சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் மீண்டும் இவர்களின் விடுதலை குறித்த பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவை நேற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து விவாதித்தது. இதனையடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.




















