உலகம்
10,000 பேர் வேலை காலி? கதறும் கார் நிறுவன ஊழியர்கள்..!

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார், உலகளவில் மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஆட்குறைப்புடன் சேர்த்து, அந்நிறுவனம் இதுவரை சுமார் 20,000 அல்லது அதன் ஒட்டுமொத்த ஊழியர்களில் 15 விழுக்காட்டினரை வேலையிலிருந்து நீக்குகிறது.
கடந்த மாதம், நிசான் தனது வரலாற்றில் முதல் முறையாக சுமார் 5 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்திருக்கக்கூடும் என்று அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், இன்று நிசான் தனது முழு ஆண்டு நிதி முடிவுகளை வெளியிடும்போது இந்த பணிநீக்கங்கள் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில், நிசான் 700 பில்லியன் யென் முதல் 750 பில்லியன் யென் (4.74 பில்லியன் முதல் 5.08 பில்லியன் டாலர்) வரை நிகர இழப்பை சந்திக்க நேரிடும் என்று கடந்த மாதம் எச்சரித்திருந்தது.
வேலை குறைப்பு செய்திகள் குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, உலகளாவிய வாகனத் துறையில் நிலவும் பொருளாதார சவால்களை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.






