இந்தியா
மோடியும் இல்லை, ராகுலும் இல்லை: மாநில கட்சியை சேர்ந்தவரே புதிய பிரதமர்!

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் இவர்கள் பிரதமர் ஆக முடியாது, மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே இந்தமுறை பிரதமராவார் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெற்று யார் பிரதமர் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறிவந்தார். இந்நிலையில் திருப்பூர் அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் மாநில கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவார் என கணித்துள்ளார்.
அப்போது பேசிய தினகரன், காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநில கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது. எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது மாநில கட்சிகளே பிரதமரை தேர்ந்தெடுக்கும் என கூறினார். காங்கிரஸ் வெற்றிபெரும் பட்சத்தில் தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு தினகரன் அளிக்க வாய்ப்புள்ளதாகவே அவரது இந்த பேட்டி உணர்த்துகிறது. மேலும் இதன் மூலம் பாஜகவுக்கு தனது ஆதரவு நிச்சயம் கிடையாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


















