இந்தியா
நீட் யுஜி 2026 –போட்டி எப்படி இருக்கும்? – எம்பிபிஎஸ் சீட் கிடைக்க கூடுதல் வாய்ப்புகள் இருக்குமா?

நீட் தேர்விற்கு 2024ல் 24,06,079 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து 23,33,297 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.2025ல் 22,76,069 பேர் விண்ணப்பித்து 22,09,318 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.இப்போது 2026ல் மார்ச் 10 ம் தேதி மாலையில் விண்ணப்பம் பதிவு செய்தவர் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்திருந்தது. இந்த எண்ணிக்கை இறுதி நாளான 11 மார்ச் இரவு 9 மணி வரை 26 லட்சத்தைக் கடந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது. இறுதி கட்ட விண்ணப்ப சரிபார்ப்பு பணி முடிவுற்ற பின்னரே விண்ணப்பங்களின் இறுதி எண்ணிக்கை தெரிய வரும்.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் அதிகாரப் பூர்வமாக நிறைவடைந்தது. உண்மையில், மார்ச் 8-ம் தேதியே காலக்கெடு முடியவிருந்த நிலையில், தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது மாணவர்களின் கோரிக்கையாலோ யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், இறுதி நேரத்தில் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த காலங்களில் நிலவிய சில முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை (NTA) இந்த முறை மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் பதிவு தேதியை மீண்டும் மீண்டும் நீட்டிக்கும் வழக்கம் இருக்காது என்பதால், மாணவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களைச் சரியாக முடித்து, ‘உறுதிப்படுத்தல் பக்கத்தை’ (Confirmation Page) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் 11,000+ கூடுதல் இடங்கள்
2025-26 கல்வியாண்டில் இந்திய மருத்துவக் கல்வியில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழப் போகிறது. நாடு முழுவதும் புதிதாக 43 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் வாயிலாக சுமார் 11,682 கூடுதல் எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகள் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை என்றாலும், இந்த மாற்றத்தினால் தமிழக மாணவர்களுக்குப் பெரும் பயன் உண்டு. மற்ற மாநிலங்களில் இடங்கள் அதிகரிப்பதால், வெளிமாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே சேர முன்னுரிமை அளிப்பார்கள். இதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு (All India Quota) இடங்களுக்கான போட்டி குறைந்து, தமிழக மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வழிவகை ஏற்படும்.
மதுரை எய்ம்ஸ்: தமிழகத்தின் புதிய அடையாளம்
ஜப்பானியத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மதுரை எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை இந்த ஆண்டு முதல் முழுவீச்சில் செயல்படத் தயாராகி வருகிறது. இது தமிழக மாணவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும்.
சாதாரண அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.18,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் வெறும் ரூ.1,628 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் தனி அறை மற்றும் சர்வதேசத் தரத்திலான ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் வழங்கப் படுகின்றன. தமிழகத்தின் டாப் 50 ரேங்க் எடுக்கும் மாணவர்கள் எய்ம்ஸ் மதுரையைத் தேர்ந்தெடுத்தால், சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), ஸ்டான்லி போன்ற முன்னணி கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்க ஏதுவாக அமையும்.
தேர்விற்கு இன்னும் சரியாக 53 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த நேரத்தில் மாணவர்கள் தேவையற்ற அச்சத்தைக் கைவிட்டு, முழு முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். குறைந்த போட்டி மற்றும் கூடுதல் இடங்கள் என இந்த ஆண்டு கிடைத்துள்ள ‘இரட்டை வாய்ப்பை’ சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்கள், தங்களது மருத்துவக் கனவை எளிதில் எட்டிப்பிடிக்க முடியும்.

