தமிழ்நாடு
கமல்ஹாசனுக்காக விட்டுக்கொடுத்தேன்: மன்சூர் அலிகான் பேட்டி

கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முன்னரே தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதால் தற்போது அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட இன்று மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது ’கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அங்கே கமல்ஹாசன் போட்டியிடுவதால் அவருக்காக விட்டுக் கொடுத்துவிட்டு தொண்டாமுத்தூர் தொகுதி வந்துள்ளேன் என்று கூறினார்.
மேலும் நான் திண்டுக்கல்லில் செய்ததை கமல்ஹாசன் கோவையில் செய்து வருகிறார் என்றும் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.


















