உலகம்
40 வருடங்களுக்கு முன் கேரளாவில் கூலித்தொழிலாளி.. இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி!

40 வருடங்களுக்கு முன் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவர் இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரேந்திரன் பட்டேல் என்பவர் ஜனவரி 1ஆம் தேதி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 51 வயதானவர் பட்டேல் நீதிபதியாகப் பதவி ஏற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் பட்டேல் மிகவும் வறுமையான ஒரு கூலித்தொழிலாளில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி என்பதால் அவரும் அவருடைய சகோதரியும் பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வந்தபின் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தனர். இருவரும் சிகரட்டு உருட்டும் தொழிலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்புக்கு பிறகு வறுமை காரணமாக படிப்பை தொடர வேண்டாம் என்றும் முழுநேரமாக பிடிக்கும் தொழிலை செய்யலாம் என்றும் பட்டேல் முடிவு செய்தார். ஆனால் ஒரு ஆண்டுக்கு பிறகு அவருக்கு மீண்டும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து அவர் பிளஸ் டூ முடித்து ஏகே நாயனார் நினைவு கல்லூரியில் அவர் சேர்ந்தார்.
ஆரம்ப காலத்தில் அவருக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் அவருடைய நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களும் அவருக்கு உதவி செய்தனர். இதனை அடுத்து அவர் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றார். இதனையடுத்து அவருக்கு வழக்கறிஞர் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எனவே அவர் எல்எல்பி படிப்பதற்காக அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் அவருக்கு அவருடைய நண்பர்கள் தான் கல்லூரி கட்டனம் செலுத்த உதவி செய்தனர். அதுமட்டுமன்றி அவர் ஒரு ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு பகுதி நேரமாக சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன்னுடைய சட்டக்கல்லூரி படிப்பு மற்றும் செலவுக்கு வைத்துக் கொண்டார்.
1995ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த அவர் 1996ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பயிற்சி தொடங்கினார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அங்கும் பயிற்சி பெற்றார். இந்த நிலையில் அவருடைய மனைவிக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்தது. இதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமெரிக்கா சென்றபோது அங்கு உள்ள டெக்சாஸ் சட்டக்கல்லூரி சேர்ந்து அங்கு உள்ள சட்டத்தை புரிந்து கொள்ள விரும்பினார். சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்து அந்நாட்டு சட்டத்தையும் அவர் படித்தார். அதன்பின்னர் பட்டேல் அமெரிக்காவில் குடும்ப சட்டம், குற்றவியல், சிவில் மற்றும் வணிக வழக்குகளை வழக்காடும் வழக்கறிஞராக இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று அமெரிக்காவின் உயர்ந்த பதவிகளில் ஒன்றாக நீதிபதி ஆக உயர்ந்துள்ளது முழுக்க முழுக்க அவரது கடின உழைப்பினால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.