சினிமா செய்திகள்
ரஜினியுடன் ‘லெஜண்ட்’ சரவணா சந்திப்பு #ViralPhoto

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான அண்ணாச்சி அருள், சென்ற ஆண்டு புதிய படத்தைத் தயாரித்து நடிக்க ஆயத்தமானார். ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்புப் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இது குறித்தான வைரல் புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அண்ணாச்சி அருள், தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோயின்களுடன் தன் கடையின் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ஹன்சிகாவுடன் அவர் நடித்த விளம்பரப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் ஆசை அண்ணாச்சி அருளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து வட இந்திய மாடலான ரித்திகா திவாரி அண்ணாச்சிக்கு ஜோடி போட்டு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விவேக், பிரபு போன்றவர்களுக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. படத்தில் முதலாவதாக சுமார் 10 கோடி ரூபாய் செலவில் செட் போடப்பட்டு பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து தான், மொத்த ஷூட்டிங்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள படத்தின் ஷூட்டிங், சென்னையில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், பாடல் ஒன்றையும் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் செட்டில் தான் அண்ணாத்த ஷூட்டிங்கும் நடக்கிறது.
படப்பிடிப்பின் இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை லெஜன்ட் சரவணன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

















