தமிழ்நாடு
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு!

சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் திடீரென தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கருணாஸ் போட்டியிட்டார். திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார் என்பதும் ஜெயலலிதா மறைவிற்கு பின் அவர் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் மீண்டும் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி 84 தொகுதிகளில் தனித்து போட்டியிட இருப்பதாகவும் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக திமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளிப்பதாக கருணாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் இளைஞரணி செயலாளர் வாண்டையார் என்பவர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்துள்ளார். திமுக கூட்டணியில் கருணாஸ்க்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






