இந்தியா
IRCTC இணையதளத்தில் இனி ஹெலிகாப்டரும் முன்பதிவு செய்யலாம்.. அதிரடி அறிவிப்பு..!

IRCTC இணையதளத்தின் மூலம் ரயில்களை ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இனி இந்த இணையதளத்தின் மூலம் ஹெலிகாப்டரையும் முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுவதும் ரயில் சேவையை செய்து வரும் IRCTC நிறுவனம், கேட்டரிங் சேவைகளும் செய்து வருகிறது என்பதும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான உணவையும் வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் குறைந்த கட்டணத்தில் அதிக வசதியுடன் கூடிய ரயில் பயணத்தை அனைத்து பயணிகளும் விரும்புகிறார்கள் என்பதால் தனியாக ரயில்வே பட்ஜெட் போடும் அளவுக்கு ரயில்வே துறையில் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக IRCTC இணையதளத்தின் மூலம் ஹெலிகாப்டர் சேவையை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான இந்து புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்காக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25ஆம் தேதி கேதார்நாத் கோயில் திறக்க இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் IRCTC கேதார்நாத் புனித கோயில் தளத்திற்கு ஹெலிகாப்டர் சேவை செய்ய உள்ளது. இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றை IRCTC அமைத்துள்ளதாகவும் IRCTC HeliYatra என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் சேவையின் சோதனை ஓட்டம் மார்ச் 31ஆம் தேதியில் நிறைவடையும் என்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் சேவைக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதியை பெற்றுள்ள IRCTC ஹெலிகாப்டர் நடவடிக்கைகளான சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் ஆபரேட்டர்கள் பாதுகாப்பான பயணத்தை ஏற்பாடு செய்வதோடு ஆலய வாரியம் மற்றும் பிற வழிகாட்டுதலையும் பக்தர்களுக்கு வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கேதார்நாத் தளத்திற்கு செல்ல முன்பதிவு செய்வதற்கு உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்துடன் ஐந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டுள்ளது. இருப்பினும் இந்த சேவைகளை முன் பதிவு செய்ய பக்தர்கள் முதலில் உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், டூரிஸ்ட் கேர் உத்தரகாண்ட் ஆப் மூலம் அல்லது 91 8394833833 என்ற மொபைல் எண் மூலம் பதிவு செய்தால் அதன் பிறகு ஹெலிகாப்டர் சேவையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்வதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடுகிறது.