இந்தியா
இன்று ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டின் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது – ரொக்கமாக செலுத்த முடியாது. டிஜிட்டல் பணபரிமாற்றம் மட்டுமே

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது என ஒன்றிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது.
உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களின்படி கட்டண உயர்வு ரூ.10 முதல் ரூ.25 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடனே இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது ஒன்றிய அரசு. அதாவது இன்று முதல் தமிழ்நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணத் தொகையாக ரொக்கமாக பெறப்படமாட்டாது. டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். யுபிஐ பணபரிமாற்றம் ஸ்கேனர் பணபரிமாற்றம் ஆன்லைன் பணபரிமாற்றம் மட்டுமே ஏற்கப்படும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் மூலம் மட்டுமே இன்று முதல் பணம் செலுத்த இயலும். ஃபாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள் கூடுதல் கட்டணமாக ரூ.30 முதல் ரூ.300 வரை பல்வேறு விகிதங்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
இந்த கட்டுப்பாடுகள் கட்டண உயர்வுகள் அணைத்தும் தமிழ்நாட்டின் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டாயம் பின்பற்றப்படுகிறது.
இதனால் சரக்குப் போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட வர்த்தக டீசல் கட்டண உயர்வாலும் சரக்குக் கட்டணங்கள் பெருமளவுக்கு உயரத் தொடங்கியிருக்கின்றன. இதனால் அன்றாட தேவைக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்கள் மீதான விலைகளும் படிப்படியாக பெருமளவில் உயரத் தொடங்கி யிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் இந்த விலை உயர்வுகள் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


