தமிழ்நாடு
தேர்தல் வந்தால் அசால்டா ஜெய்பேன்: அழகிரியின் இடைத்தேர்தல் பிளான்!

திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது அண்ணன் மு.க.அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவரை தற்போதுவரை கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை.
இதனையடுத்து வர இருக்கின்ற இடைத்தேர்தலில் அழகிரி போட்டியிட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒருவேளை தான் தேர்தலில் போட்டியிட்டால் தனது வெற்றி வாய்ப்பு எளிதாக உள்ளதாக அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அழகிரி, திருவாரூரில் இடைத் தேர்தல் வரப்போகிறது. தலைவர் இல்லை, நீங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று பலர் என்னிடம் வற்புறுத்தினார்கள். தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் அவர்களிடம் கூறிவிட்டேன்.
தேர்தலில் நான் போட்டியிட்டால், மக்களிடம் வாக்குகள் கேட்பேனோ இல்லையோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன். உடனே தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் தேர்தல் வரட்டும், பார்ப்போம் என்றார். மேலும் வரும் வழியில் என்னை வரவேற்க நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த தொகையைக் கூட செலவு செய்யாமல் எளிமையாக வெற்றி பெறலாம் என்று தெரிகிறது என்றார் மு.க.அழகிரி.




















