தமிழ்நாடு
நெல்லையில் பரபரப்பு: தைப்பூச மண்டப பூட்டுடைக்கும் போராட்டம்!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வரும் அக்டோபர் 11 முதல் 22-ஆம் தேதி வரை மகா புஸ்கர விழா நடைபெற உள்ளது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்க கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த புஸ்கர விழா தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை முருகன் ஆலயத்தின் அருகே உள்ள தைப்பூச மண்டபத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவில் ஆற்றோரம் உள்ள பகுதிகளில் புனித நீராடுவார்கள். பக்தர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் தைப்பூச மண்டப பகுதி பாதுகாப்பற்றது, மேலும் அங்கு ஆற்று நீர் சுழற்சி இருப்பதால் பக்தர்கள் நீராடும்போது அசம்பாவீதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி அந்த பகுதிக்கு தடையும் விதித்துவிட்டார். மேலும் வேறு பகுதியில் விழாவை வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளனர். இந்து முன்னணியினர் உள்ளிட்ட ஆன்மீக அமைப்பினர் தைப்பூச மண்டபத்தில்தான் விழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அந்த மண்டபத்தின் பூட்டை உடைக்கும் போராடத்திற்காக அணி வகுத்தார்கள்.
நெல்லையில் அவர்களை மறித்த காவல்துறையினர் தடை செய்யப்பட்ட தைப்பூச மண்டபத்திற்கு சட்ட விரோதமாக செல்ல வேண்டாம் என அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் தற்போது இந்து அமைப்புகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது.



















