தமிழ்நாடு
என்னை யாராலும் நீக்க முடியாது: தோப்பு வெங்கடாச்சலம் ஆவேசம்

நான் அதிமுகவில் தான் உள்ளேன் என்றும் என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தோப்பு வெங்கடாசலம் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் நேற்று சுயேச்சையாக போட்டியிட பெருந்துறை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம் ’நான் இன்னும் அதிமுகவில் தான் உள்ளேன் என்றும், அதிமுக உறுப்பினரான என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் கூறினார். மேலும் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு தருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















