இந்தியா
ஹிஜாப் அணியலாமா? கூடாதா? கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநில கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தியதால் அதற்கு போட்டி போராட்டமாக இந்து மாணவர்கள் காவி உடை அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘தேர்வு நடைபெற உள்ள நிலையில் உடை கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல என்றும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும் இந்த விவகாரத்தில் உணர்வுபூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும் ஒருவர் தங்களுடைய உடைகளை தேர்வு செய்யும் உரிமை அவருக்கு உண்டு என்றும் இதை பொது உத்தரவு மூலம் தடை செய்ய முடியாது என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியபோது, உடை விஷயத்தில் கல்வி நிறுவனம் எடுக்கும் முடிவுகளுக்கு தான் மாணவர்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தாங்களாகவே உடைகளை தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும் இதில் மாற்றம் வேண்டும் என்றால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை அணுக வேண்டுமே தவிர இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது என்றும் கூறினார்.
இதனையடுத்து நீதிபதி ’இந்த வழக்கில் நான் சட்டப்படிதான் தீர்ப்பு வழங்குவேன் என்றும், உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க மாட்டேன் தீர்ப்பு வரும்வரை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்றும் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


















