இந்தியா
வழுக்கை தலையில் முடிமாற்று சிகிச்சை.. 30 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடந்த சில ஆண்டுகளாக தலைமுடியில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் வழுக்கை தலையில் பல்வேறு வைத்தியங்கள் செய்து முடியை வளர்க்க பணத்தை செலவு செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த 30 வயது ரசித் என்பவர் தனது வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரது தலையில் திடீரென வீக்கம் பரவியதாகவும் அவரது சிறுநீரகம் திடீரென செயல் இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவருடைய மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்ஹு வந்த நிலையில் கடைசியில் ரசித்து இறந்து விட்டார்.
அவர் இறக்கும் போது அவருடைய முகம் வீங்கி இருந்ததாகவும் அவரது உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் தடிப்புகள் இருந்ததாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு திறமையான முடிமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே இதனை மசெய்ய முடியும் என்றும் அரைகுறையாக தெரிந்தவர்கள் செய்வதால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ரசித் தாயார் கூறிய போது தயவு செய்து என்னை மாதிரி யாரும் குழந்தைகளை இழந்து விடாதீர்கள், முடி இல்லை என்றால் பரவாயில்லை, அதற்காக உயிரை இழக்கும் நிலைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
இதனை அடுத்து முடிமாற்று அறுவைசிகிச்சை செய்யப்படும் கிளினிக்குகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் உரிய முறையான மருத்துவர்கள் அந்த சிகிச்சை செய்கிறார்களா? கிளினிக்களுக்கு உரிய லைசென்ஸ் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.