சினிமா
கெளதம் கார்த்திக்: “இயக்குநர் சிம்பு என்னிடம் கதை சொன்னார்!

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “’பத்து தல’ படத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா சாரும் அவரது டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் என்னை பார்க்கும்போதே பெருமையாக இருக்கிறது. என்னை கொடுமைப் படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார்.
இந்த தொழிலுக்கு வந்துவிட்டு வேலைப் பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தாத்தா இறந்து விட்டார். அவரது தொழிலில் நான் இறங்கி பார்க்கிறேன் என்றால் அதை விட வேறு சந்தோஷம் இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு போகிறது. அதற்காக எந்த விஷயத்தையும் நான் தாங்கிக் கொள்வேன். சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணையாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண்டேன்.
அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதை கேட்டு நான் அழுதுவிட்டேன். அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன். படப்பிடிப்புத் தளத்தில் வேலையையும் மீறி அவர் என்னிடம் சில கதைகளை சொன்னார். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா. திரையரங்குகளில் ‘பத்து தல’ பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.


















