தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி உருவபடம் எரிப்பு: ஆத்திரத்தில் பாஜக இளைஞரணி!

பாஜக முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து இரு கட்சியினருக்குமான மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

#image_title
பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணையும் போது பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். அவரை அதிமுக அரவணைத்துக்கொண்டது பாஜகவை எரிச்சல் அடைய வைத்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமாவை அறிவித்தார்.
திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவில் இருந்து விலகி சொல்லி வைத்தார்போல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கிய் பொறுப்பாளர்களும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனையடுத்து இரு கட்சியினரிடையேயும் மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. கூட்டணியை முறிக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும், நிச்சயம் எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததை கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த விவகாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.