தமிழ்நாடு
யார் வீட்டு அப்பன் பணம்… பாஜகவில் போய் சேர்ந்து விடுங்கள்… ஆளுநருக்கு எதிராக துரை முருகன் ஆவேசம்!

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் ஆளுநரை மிகக் கடுமையாக சாடினார்.

#image_title
அப்போது பேசிய அவர், கடினமான இதயத்தோடு தான் முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என தெரியும் முன்பே ஆளுநர் தேவையில்லை என்று திமுக கூறியது. மாநில அரசை ஆட்டிபடைக்க ஒரு ஏஜென்ட் தேவை என்பதால் ஆளுநர் பதவியை மத்திய அரசு உருவாக்கியது.
ஆளுநர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை. காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா? யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள். பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள். இந்த தீர்மானம் வருவதை அறிந்தே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் ஸ்டாலின் இப்போதே பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் என்று கூறினார் துரை முருகன்.
இந்த விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அட்சய பாத்திரம் என்ற பெயரை சொல்லி ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்ட அரசு பணம் குறித்து பேசினார். ஒதுக்கப்பட்ட 18 கோடி ரூபாயில் 11.32 கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றபட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செலவு செய்த 11.32 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறல்கள் தடுக்கப்படும். விதிமுறைகளில் படிதான் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உடனடியாக கொண்டுவருவேன் என்றார்.