தமிழ்நாடு
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி ரூ.5 முதல் ரூ65 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒரு முறை கட்டணம் 85 ரூபாயிலிருந்து 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 90 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருமுறை கட்டணம் 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்களுக்கு 145 ரூபாய் என இருந்த கட்டணம் 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை கட்டணம் 220 ரூபாயிலிருந்து 240 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களில் பேருந்து மற்றும் லாரிகளுக்கு 290 ரூபாய் என இருந்த கட்டணம் 320 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருமுறை கட்டணம் 440 ரூபாயிலிருந்து 480 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகக் கனரக வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் 470 ரூபாயாக இருந்து வந்த நிலையில் 515 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை கட்டணம் 705 ரூபாயிலிருந்து 770 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயணத்துக்கு 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும், இருமுறை பயணத்திற்கு 10 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.















