இந்தியா
குஜராத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: உயிர்காக்கும் வென்டிலேட்டர்களை குப்பை லாரியில் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குஜராத்தில் நேற்று முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்படும் ஒரு நாள் எண்ணிக்கையானது 3,000-ஐ கடந்தது. பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிலருக்கு சுவாசிக்கு வென்டிலேட்டர் தேவை இருந்து வருகிறது.
சூரத் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர்கள் குறைவாக இருந்த காரணத்தினால் அரசு தரப்பு, கூடுதல் வென்டிலேட்டர் கேட்டு மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து வல்சாத் பகுதியிலிருந்து சூரத் அரசு மருத்துவமனைக்கு குப்பை ஏற்றிச் செல்லும் லாரியில் வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. உயிர் காக்கும் வென்டிலேட்டர்களை இப்படி பொறுப்பில்லாமல் அரசு தரப்பு கையாண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரணை செய்ய அரசு தரப்பு உத்தரவிட்டுள்ளது.